Monday, November 10, 2008

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழனின் கடிதம்

இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சிலகண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒருமூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். நம்காலடியில் உள்ளதேசத்தில் நம்சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர்11நடந்துகொண்டிருப்பதை நாம் இன்று வரைகண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும்காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம்.ஒரு சீக்கியமாணவனின்மயிரைஅறுத்ததத்ட்காக வெகுண்டெழுந்த சீக்கிய இனம்எங்கே,உன்தொப்புள்கொடிஉறவின் உயிரைஅறுத்தபின்னும் வாய்மூடிவேடிக்கை பார்க்கும் நம்தமிழ் இனம்எங்கே!!!!! கண்கள் நிறையக் கனவுகளோடும்,துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறதுநலமுடன் இருக்கிறீர்களா?உலகத் தமிழர்களே?குண்டு விழாத வீடுகளில்,அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள்,இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும்,என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்......எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது,உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம்ஆடும்"மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்குவந்திருக்கும்.அண்ணனும்,தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?அம்மா,அப்பாவின் மறைவுக்குப் பின்னால்,எனக்குத் தலை வாரிவிட்டு,பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்டதேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு,நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை,இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........ஒலிம்பிக்தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும்,என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும்,அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது,எனக்கு உங்கள்நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு,இலங்கை ராணுவத்திற்குநன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.ஒரு பக்கம்,இரங்கற்பா எழுதிக் கொண்டு,மறுபக்கம்,நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும்உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறைஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள்,சாவின் மடியில்எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது கிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின்மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது,குழந்தைகளையும்,கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒருவகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவதுகுறையட்டும்....... மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலானவெளிச்சத்தில்,தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள்இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள்,உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்று தான் அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து,நிர்வாணமாக்கி. இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல்,எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் " சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள்,பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கியகேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள்,நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின்இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு,செப்பயான் குளத்தில் முங்கிஎழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு,வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து,அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.முகாமின்,தகரத் தடுப்புகளின் இடைவெளியில்தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும்,அம்மாவின்மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு,பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும்,அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்......அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு,ஆனால் நீங்கள்பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள்,எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....அமைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும்கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம்வேண்டாம் அண்ணா,என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு,உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத்தமிழர்களே........ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும்,துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.வலி கலந்த நம்பிக்கைகளுடன்செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழன்

Sunday, November 9, 2008

யாழ் நாயன்மார்கட்டில் பெண் சுட்டுக்கொலை

Sunday, 09 November 2008

யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு குளத்திற்கு அண்மையாக இளம் பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், சிறீலங்கா படைகளினதும்,  புலனாய்வாளர்களினதும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் வாழ்ந்து வந்தவர் என்றும் எமது வடமராட்சி செய்தியாளர் தெரிவித்தார்.

குமாரபுரத்தில் மூன்றாவது தடவை வான் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட ஐவர் காயம்

Sunday, 09 November 2008

கிளிநொச்சி, பரந்தனிலுள்ள குமாரபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இடம்பெற்ற வான்வழி வானூர்தித் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வன்னி வான் பரப்பில் தோன்றிய சிறீலங்கா வான் படையினர் இரண்டு குண்டுவீச்சு வானூர்திகள் இன்று பிற்பகல் 12:50 அளவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தன.

இதன்போது இரண்டு அகவையுடைய சிறுவன் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதே குமாரபுரத்தில் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தயாரது 31வது நாள் அந்தியேட்டி நிகழ்விற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டபோது இடம்பெற்ற தாக்குதலில் சிறுவனான மனோகரன் விதுரன் காயமடைந்துள்ளார்.

கடந்த 30 நாட்களுக்கு முன்னர் இவரது தாயாரான 33 அகவையுடைய உசா மனோகரன் சிறீலங்கா வான் படையினரது தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

காயமடைந்த விதுரன் தர்மபுரத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரபுரத்தைச் சேர்ந்தவர்களான 12 அகவையுடைய சிறீஸ்காந் தரங்கன், இரண்டு பிள்ளைகளின் தயாரான 63 அகவையுடைய சிவராசா கெளரி, இரண்டு பிள்ளைகளின் தாயாரான் 72 அகவையுடைய, செல்லத்துரை கமலாம்பாள், மற்றும் பரந்தனைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 அகவையுடைய நாகலிங்கம் சிவராசா ஆகியோரே காயமடைந்த ஏனையோர் ஆவர்.

இவர்களில் இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து தருமபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா வான் படயினர் இன்றைய தாக்குதலிலும் 9 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகள் மட்டுமன்றி குமாரபுரத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமும், கடையும் சேதமடைந்துள்ளன.

பிற்பகல் 12:50 முதல் 1:20 வரையான 30 நிமிட நேரத்தில் 4 தடவைகள் சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கடந்த மாதம் 10ஆம் நாள் பரந்தன் குமாரபுரத்தில் சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இன்று காயமடைந்த விதுரனின் தயார் உசா மனோகரன் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்திருந்தனர்.

குமாரபுரத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமும், கடை ஒன்றும் கடந்த 10ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலிலும் சேதமடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

கடந்த மாதம் 28ஆம் குமாரபுரம் மீது மீண்டும் மேற்கொள்ளப்பட்டிருந்த வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் காயமடைந்திருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது தடவையாக குமாரபுரம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.